கடவுள் வெளிப்படுத்திய செய்திகள்-இக்காலத்து சத்தியங்கள்

நம்பினால் நம்புங்கள்

இன்றைக்கு இந்த உலகத்தில் இந்துக்கள் ஸ்ரீகிருஷ்ணர் வருவாரென்று எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.முஸ்லீம்கள் இமாம் மஹதியையும்,கிறிஸ்தவர்கள் இயேசுவையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.மூன்று அல்லது நான்கு கடவுள்கள் வருவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்கள் கடவுளைப்பற்றி பலவிதமாகப் பேசுகிறார்கள். கடவுள் எங்கே இருக்கிறார்? எத்தனை தேவர்கள் நமக்கு இருக்கிறார்கள்? நாம் விரும்பியதையெல்லாம் வணங்குகிறோம். கடவுளை பல நாமங்களால் வித்தியாசமான மொழிகளில் அழைக்கிறோம். உருது மொழியில் "அல்லாஹ்" என்றும் எபிரேய மொழியில் "இயேசு" அல்லது "யெகோவா" என்றும் சமஸ்கிருத மொழியில் "நாராயணா" என்றும் அழைக்கிறோம்.ஆனால் அவைகளெல்லாம் ஒரே கடவுளைத்தான் குறிக்கிறது. ஒரே கடவுள் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓ! கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எனக்கு காண்பியுங்கள் என்று சொல்ல முடியாது.பரமாத்மா எல்லா இடத்திலேயும் இருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார். ஆனால் பரமாத்மாவைப் பார்க்க முடியாது. நாம் மின்சாரத்தைப் பார்க்க முடியாது. மின்விசிறி சுழல்வதையும், மின்விளக்குகள் எரிவதையும், குளிசாதனப்பெட்டி வேலை செய்வதையும் பார்க்கிறோம். ஒலிபெருக்கிகளின் மூலமாக சத்தத்தைக் கேட்க முடிகிறது. அதேவிதமாக கடவுள் எத்தனையோ மனிதர்கள் மூலமாக கிரியை செய்கிறார். சிலர் மின்விளக்குகளைப் போல பிரகாசிக்கிறார்கள். சிலர் மின்விசிறியைப் போல சுழலுகிறார்கள். இந்த சாதனங்களையெல்லாம் மின்சாரம் இயக்குகின்றது. ஆனால் மின்சாரத்தை யாரும் பார்த்ததில்லை. மின்சாரம் என்றால் என்ன? என்பதை யாரும் விளக்கிக் கூற முடியாது.

கடவுள் என்றால் என்ன? அவர் தொழுதுகொள்ளப்பட வேண்டிய பொருள். தொழுது கொள்ளப்பட வேண்டிய பொருள் என்றால் அவருக்கு ஒரு உருவம் இருக்க வேண்டுமல்லவா? பரமாத்மா தம்மை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. ஆகவே அவர் ஒரு நபரைத் தெரிந்துகொண்டு அவரை சிருஷ்டித்தார். அவர்தான் பரமபுருஷர். இவர் பரிசுத்தமானவர் அதாவது டிரான்ஸ்ஃபார்மர் போன்றவர். பரமாத்மாவின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறவர்.நாம் காற்றை வெளிப்படுத்த வேண்டுமென்றால்,ஒரு கால்பந்தை எடுத்து அதற்குள் காற்றை நிரப்பி காற்று இதற்குள் இருக்கிறது என்கிறோம். பரமாத்மாவை வெளிப்படுத்த டிரான்ஸ்ஃபார்மர்-நாராயணர் அநேக அவதாரங்களை எடுத்துக்கொண்டு வந்தார்.அவர் கிருஷ்ணராக வந்து நீதி செய்பவர்களுடன் எப்பொழுதும் இருக்கிறேன் என்பதைக் காண்பித்தார்.இயேசுவை சிருஷ்டித்து கடவுளுடைய அன்பைக் காண்பித்தார். இராமராக வந்து தம்முடைய திவ்ய சுபாவத்தைக் காண்பித்தார். இவர்கள் எல்லாரும் அவதாரங்கள், அல்லது தீர்க்கதரிசிகள். அவர்கள் மரிக்க வேண்டும். ஆனால் இந்த கலியுகத்தில் நாராயணர் மரிக்க முடியாத தம்முடைய சொந்த சரீரத்தில் வர வேண்டும்.

சத்தியம் என்னவென்றால் கடவுள் ஒருவரே அவர் இந்த அண்டசராசரத்தையும் சிருஷ்டித்தார்.அவருடைய ஆவி அதாவது பரமாத்மா அண்டசராசரத்திலும் வியாபித்துள்ளது. அத்துடன் பரமாத்மா தம்மை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு உருவத்தை எடுத்துக் கொள்கிறார். அவரைத்தான் தொழுதுகொள்ளப்பட வேண்டிய பொருள் என்று கருதி தொழுகிறோம்.

ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் பெருகி தர்மம் குறையும்போது கடவுள் இந்த உலகிற்கு ஒரு மனிதனாக வந்து மெய்யான தர்மத்தை நிலைநாட்டியுள்ளார். அவரோடுகூட தேவலோக மக்களையும் அழைத்துவந்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் கடவுள் தேவலோக மக்களுடன் மறைந்து போய்விடுகிறார். இதைத்தான் பாகவதமும் கூறுகிறது. இன்றைக்கு மேலை நாட்டினர், மற்றும் பிறமதத்தினரிடம் இராமாயணம்,மகாபாரதத்தைப் பற்றிக் கூறினால் இதெல்லாம் கட்டுக்கதை என்று கூறுகின்றனர். அவர்கள் தங்களுடைய கொள்கைகளையும் தங்களுடைய மதத்தையும் நிலைநாட்டுவதற்காக அநேக ரகசியங்களையும் மூடி மறைத்தார்கள். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் தர்மத்தைப் பின்பற்றி நடக்காதபோது கடவுள் பல தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களை கண்டித்து நேர்வழியில் நடத்தியுள்ளார். கடவுள் தம்மைப்பற்றிய இரகசியங்களையும் கலியுகத்தின் இறுதியில் வருவதைக் குறித்தும் சிறிது சிறிதாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஜனங்களோ மெய்யான கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு,தீர்க்கதரிசிகளை வழிபட ஆரம்பித்தனர். உதாரணமாக நாம் ஒரு ஊருக்குப் போகும் பாதையிலே வழிகாட்டும் பலகையைக் காண்கிறோம். அந்த வழிகாட்டும் பலகை அந்த ஊர் அல்ல. அதையும் கடந்து சென்றால்தான்,நாம் செல்லவேண்டிய இடத்தை அடையலாம். ஆனால் மக்களோ வழிகாட்டிப்பலகையாக வரக்கூடிய தீர்க்கதரிசிகளின் பெயரால் மத ஸ்தாபனங்களைத் தோற்றுவித்து அங்கேயே நின்றுவிடுவதால் உண்மையான கடவுளிடம் யாரும் செல்லாமல் பின்தங்கி விடுகின்றனர்.

ஒரே இறைவனைப் பற்றிய சத்தியங்களை அறிந்துகொள்வதற்காக பகவத்கீதை,பாகவதம்,விவிலியம்,குர்-ஆன் போன்ற பரிசுத்த வேதங்களை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். ஆனால் இவைகளை யாரும் சரியாகப் படிப்பதில்லை. வேதங்களை எடுத்து போதிப்பவர்களும் உண்மையான சத்தியத்தை மக்களுக்குப் போதிப்பதில்லை. கலியுகத்தின் முடிவில் கடவுள் ஒரு சாதாரண மனிதராக வரவேண்டும். இதுவே கடவுளின் மகத்தான திட்டமாகும்.இன்று தன்னையே கடவுள் என்று பறைசாற்றும் பல பகவான்கள் இருக்கிறார்கள். மூவாயிரம் ஜகத்குருக்கள் இருக்கிறார்கள். அநேக கல்கி பகவான்களும் இருக்கிறார்கள். இப்பொழுது இவர்களில் யார் உண்மையான அவதாரபுருஷர்? என்பதுதான் போட்டி. இதுதான் சோதனை.

லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக கடவுள் அகில உலகத்தையும் படைத்து,பரிபாலித்து,அரசாட்சி செய்த போது இந்த உலகில் தேசம் என்ற பிரிவினையோ,ஜாதி,மதம்,மொழி,நிறம், என்ற பாகுபாடோ இருந்ததில்லை.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஐக்கியத்தின் கீழாக இருந்தனர். பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயணரின் உபதேசங்களே வேதங்களாக இருந்தது. மனிதனுக்கு சுயாதீனம் இருந்தது. கடவுளோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிந்தது. வியாதி, கஷ்டம், சோதனை, மரணம், என்பது இல்லை. அனைவரும் நித்திய ஜீவிகளாய் சந்தோஷமாய் வாழ்ந்தனர். அந்தயுகம் நீதியுகம் என்று அழைக்கப்பட்டது. இந்த யுகத்தில் அவர் ஒரு வேள்வியை அல்லது ஒரு பலியை - யாகத்தைச் செய்தார். பகவத்கீதை 3:10 "ஆதியில் பிரம்மா யக்ஞங்களுடன் மனிதர்களை சிருஷ்டித்து,இதனால் வளர்ச்சியடைவீர்கள்; இது உங்களுக்கு விரும்பியதை அளிக்கும் காமதேனுவாக இருக்கட்டும்" என்று கூறினார்.

அந்த பலி என்ன? வெறும் நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி வேள்வி வளர்த்தார்களா? இந்த வேள்வியைத்தான் பிரம்மா ஆதியிலே நிகழ்த்தினாரா? இல்லை. வேதத்தின்படி ஆராய்ந்து பார்த்தால் பரமபுருஷர் உலகம் துவங்குவதற்கு முன்னதாகவே நமக்காக,தம்மைத்தாமே ஆதிபலியாக ஒப்புக்கொடுத்து,அவர்தம் உயிரைக்கொடுத்து,மீண்டும் அதைப் பெற்றுக்கொள்ளும் சக்தி தமக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபித்துக் காண்பித்தார். அதைத்தான் வேதங்களில் "ஆதி வேள்வி" என்றும்"பிரம்ம யக்ஞம்" என்றும் "உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாத்திலே "பக்ரீத்"என்று சொல்லப்படுகின்றது. “பக்ரீத்” என்றால் ஆட்டைப்பலி கொடுத்து,அந்தக்கறியை சமைத்து சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறார்களேயொழிய, அது உண்மையில் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? அந்தப் பலியை நினைவு கூர்வதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று மக்கள் தெரிந்துகொள்வதில்லை.ஆதிபலியை பூமியில் உள்ள மக்கள் மறந்து விட்டார்கள்.

நல்ல வாழ்க்கை நடத்தினால் கர்மப்பாவம் போய்விடும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.அது ஒருபோதும் போகாது. கடவுள்தான் கர்மத்தை நீக்க முடியும். அதற்கு அவரே பரிகாரம் செய்திருக்கிறார்.அதுதான் ஆதிவேள்வியாகும். கர்மப்பாவம் என்பது பழைய கணக்கு அல்லது கடன்போன்றது. அந்தக் கடனை நாம் செலுத்தி தீர்க்க வேண்டும். பழைய கணக்கை சரி செய்யாமல் நான் இன்றைய தினத்திலிருந்து புதுக்கணக்கு ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் கடன் கொடுத்தவர்கள் சண்டைக்கு வருவார்கள்.அதேவிதமாகத்தான் இன்று முதல் நான் நல்ல வாழ்க்கை நடத்துவேன் என்றால் முன்பு செய்த கர்மங்களுக்கு யார் கணக்கு கொடுப்பார்கள்? அதை நிவிர்த்தி செய்யவே நாம் ஆதிவேள்வியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆகவே இந்த கலியுகத்தின் முடிவு காலத்தில் ஸ்ரீமந் நாராயணர் கல்கி மகா அவதாரமாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற நாமத்தில் அவதரித்து அந்த ஆதிவேள்வியை பூமியில் நிழலாட்டமாக செய்து காண்பித்து மரணத்தை வென்று சதாகாலங்களிலும் ஜீவிப்பவர் என்பதை நிரூபித்துக் காண்பிக்கிறார். மேலும் ஒரு கூட்ட மக்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வையும் அளிக்கிறார். இதன் மூலமாக இந்த உலக மக்கள் இவர்தான் இந்த யுகத்தை முடிக்க வந்த உண்மையான அவதாரபுருஷர் என்பதை தெரிந்துகொண்டு மெய்யான சத்தியத்தைப் பின்பற்றுவார்கள். இப்பொழுது கல்கி மகா அவதாரம் அவதாரித்து விட்டார் என்றால் இந்த உலகில் ஏன் இத்தனை அநியாங்கள் நடக்கிறது? இதற்கு ஒரு முடிவு எப்பொழுது வரும்? என்று அநேகர் கேட்கிறார்கள். இந்த கலியுகத்தில் கடந்த யுகத்தில் செய்தது போல் அல்லாமல் முதன் முதலாக அவர் நேரடியாக தேவலோக மக்களோடு கூட பூலோகத்திற்கு வந்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.இரண்டாவதாக தர்மத்தை முழுமையாகப் பின்பற்றுகிற மக்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வை தந்து பாதுகாக்கிறார். இறுதியாக அவர் ஏற்படுத்திய தர்மத்தைப் புறக்கணித்த மக்கள் எல்லோரையும் அழிப்பதின் மூலம் கலியனும் முற்றிலுமாக அழிந்து விடுகிறான். இதுதான் இந்த யுகத்தின் நீதியாகும். இந்த நீதியைத்தான் மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமத்திலிருந்து, நாங்கள் உலகமெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

கடந்த யுகங்களிலே அவதார புருஷர்களாக வந்தவர்கள் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், இயேசு கிறிஸ்து. இவர்களைப் பின்பற்றியவர்கள் வெகுசிலரே.அதே போல இந்த கலியுகத்தின் இறுதியிலே வந்த கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைப் பின்பற்றி நடப்பவர்கள் சிறுகூட்ட மக்களே.அவர்கள் உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்திலுள்ள எல்லா ஜாதி,மத சம்பிரதாயங்களைத் துறந்து, உலகத்தோடு ஒட்டாமல், கடவுள் ஒருவரையே சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் உலகத்தின் எந்தப் பாகத்திலிருந்தாலும் உங்கள் மத சம்பிரதாயங்களை எல்லாம் துறந்து உங்கள் இருதயத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைக் குறித்து தியானித்துக் கொண்டிருந்தால் அவர் நேரடியாகவே உங்களைத் தொடுவார். உங்களுக்கு எந்த மத்தியஸ்தரும் தேவையில்லை. நீங்கள் மதமில்லாத மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்.உங்களையும் அவர் இந்த உலகிற்கு வரும் அழிவிலிருந்து காப்பார்.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு மிகப்பெரிய அழிவு வந்து அந்த யுகம் முடிந்து ஒரு புதிய யுகம் பிறந்திருக்கிறது.அதேபோல இந்த கலியுகமும் இப்பொழுது முடிவடைந்து நாம் ஒரு புதிய யுகத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்த கலியுகம் முடியும் இந்த தருணத்தில் ஒரு மிகப்பெரிய அழிவு வரும் என்று வேதங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய அழிவானது எப்படி நிகழும் என்பது அநேகருக்கு தெரியாது.நம் கண்முன்னே நடந்து வருகிற சின்ன சின்ன அழிவுகள் எல்லாம் பின்னால் வரக்கூடிய மிகப்பெரிய அழிவிற்கு முன் உதாரணங்களாகும். கலாச்சார சீரழிவு,இயற்கை சீற்றம்,சுனாமி,பூகம்பம்,புயல் அழிவு,தீராத பயங்கரமான வியாதிகள், உலக பங்குச்சந்தை வீழ்ச்சியினால் விலைவாசி உயர்வு,வேலை இழப்பு,வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதனால் மனமுடைந்து அநேகர் தற்கொலை செய்து கொள்ளுவார்கள்.

அதேவிதமாக ஆன்மீக நோக்கில் பார்த்தால் கடவுள் பெயரைச் சொல்லி மக்களைக் கொள்ளையடிக்கும் குருமார்கள்,சுவாமிஜீக்கள்,போலி அவதார புருஷர்கள், பலர் எழும்பியிருக்கிறார்கள். மக்கள் எத்தனை திருத்தலங்களைச்சுற்றி வந்தாலும், தியானங்கள் பண்ணிணாலும், தீட்சை எடுத்தாலும், அவர்களுக்கு மனதில் சாந்தி இல்லை.மனிதர்களிடையே உண்மையான அன்பு,பாசம்,மனிதநேயம், அற்றுப்போய் விட்டது. உண்மையான் தொண்டு, சேவை மனப்பான்மை இல்லாமல் பதவிக்காகவும், பணத்திற்காகவும், போகத்திற்காகவும், போட்டி போடுகின்றனர். எந்த தீமையையும் செய்ய மக்கள் துணிந்தவர்களாயிருக்கிறார்கள். இதுவும் கூட நம் மத்தியில் நம்மையறியாமலே நடைபெற்றுவரும் மிகப்பெரிய அழிவுகளாகும். அதிவிரைவில் ஏதோ ஒரு பயங்கர அழிவு பூமியில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூட திகைக்கிறார்கள். அப்படியென்றால் ஏதோ ஒன்று நடைபெறப்போகிறது என்பது மட்டும் நிச்சயம். இவ்விதமாகச் சொல்லி உங்களைப் பயமுறுத்தவில்லை. இந்த அழிவு எதனால் வருகிறது? இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது என்பதை ஆலோசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கூறுகிறோம்.

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக எங்கள் ஆசிரமத்திற்கு வரலாம். கடிதத் தொடர்பு கொள்ளலாம். எங்களிடமிருந்து இலவசமாகப் புத்தகங்களை வாங்கிப் படித்து பயன் அடையுங்கள். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா உங்களை ஆசிர்வதிப்பாராக !

Free Web Hosting